Home இலங்கை செய்திகள் 14 ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் ஒருபோதும் வெளியிடப்படவில்லை..!

14 ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் ஒருபோதும் வெளியிடப்படவில்லை..!

26

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக விசாரணைக்காக 1956 தொடக்கம் 2022 யூன் 6 ம் திகதிவரை 36 ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டும் 14 ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் ஒருபோதும் வெளியிடப்படவில்லை எனவே புதிய உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை உருவாக்குவதற்கு முன், முன்னைய ஆணைக்குழுக்களை அங்கீகரிக்க வேண்டும்.  இதுவரை வெளியிடப்படாத அனைத்து அறிக்கைகளையும் ஜனாதிபதி இணயத்தளத்தில் வெளியிடுமாறு அரசாங்கத்திடம்  4 அரசசார்பற்ற நிறுவனங்கள்  கூட்டாக இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்

பெண்கள் பிரிவு வலையமைப்பு, மனித உரிமைக்கும் வளர்ச்சிக்குமான நிலையம்,  பன்னாட்டு உண்மைக்கும் நீதிக்குமான திட்டம், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் , ஆகிய 4 அமைப்பினர் கூட்டாக இணைந்து நேற்று செவ்வாய்க்கிழமை (20) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் பாரதூரமான மனித உரிமைமீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு அமைக்கப்பட்ட அரசாங்க ஆணைக்குழுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்பட்ட இலங்கையர்களால் கணக்குவைக்க முடியாத எண்ணிக்கைகளைத் தாண்டியுள்ளது. இருந்தும் பிறிதொரு ஆணைக்குழுஉருவாக்கப்படவுள்ளது.

உண்மை, ஐக்கியம் மற்றும் நல்லிணக்க ஆணைக்கு எனப்படும் இப்புதிய ஆணைக்குழு, உண்மையைக் கண்டறிவதற்காக சிறிலங்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட குறைந்தது 36 ஆணைக்குழுக்களைக்கொண்ட வரிசையில் புதிதாக இணைந்துள்ளது. எனினும், நீதியும் பொறுப்புக்கூறலும் மழுப்பலானதாகவே தொடர்ந்தும் இருந்துவருவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

நடவடிக்கை எடுக்கக்கோரி, காணாமற்போனவர்களின் குடும்பங்கள் துணிகர வீதிப்போராட்டங்களை ஆரம்பித்து இன்று எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ளாமலேயே 240 இற்கும் மேற்பட்ட வயதுமுதிர்ந்த உறவினர்கள் உயிரிழந்துள்ளனர்.

அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட இப்புதிய உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிராகரித்து 37 குடியியல் சமூக அமைப்புக்களும் 19 செயற்பாட்டாளர்களும் ஏற்கனவே வௌ;வேறு அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

கடந்தகாலப் பொறிமுறைகளின் மோசமான தோல்வி, ஆவணங்களைப் பகிரங்கப்படுத்தத் தவறியமை, புதிய கட்டமைப்பிற்கான போதுமான அதிகாரமின்மை, சர்வதேச பிரதிநிதிகளை ஈடுபடுத்தாமை பொருத்தமான நீதித்துறைப் பொறிமுறையின்மை, மற்றும் முந்தைய ஆணைக்குழுக்களின் நீண்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தத் தவறியமை ஆகியவற்றை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கம் 1956 நவம்பர் முதலாம் திகதி கிழக்கு மாகாணத்தில் குடியில் கலவரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுவதற்கு முதலாவது ஆணைக்குழு அமைக்கப்பட்டது அதனை தொடர்ந்து 2022 மார்ச் 31 இற்கும் மே 15 இற்கும் இடையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில்; இடம்பெற்ற தீவைப்பு, கொள்ளை மற்றும் களவு ஆகியை அனைத்து வடிவ நாசவேலைகளுக்கும் ஆளாக்கப்பட்ட அல்லது இழக்கப்பட்ட தனிநபர்களதும், நிறுவனங்களமும், அமைப்புக்களதும், கூட்டு நிறுவனங்களதும் சொத்துக்கள் மற்றும் ஆளிழப்புக்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கான விசாரணைக்கா 36 வது ஆணைக்குழு அமைக்கப்பட்டது

இந்த 36 ஆணைக்குழுக்களில் 14 ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் ஒருபோதும் வெளியிடப்படவில்லை என்பது அதிர்ச்சியானது என்பதுடன்  பெரும்பாலான ஆவணங்கள் அரசாங்க இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள போதிலும், வெறும் ஒருசில ஆணைக்குழுக்களின் அறிக்கைகளே அவ்விணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. உண்மையில், கடந்த கால ஆணைக்குழுக்களால் வெளியிடப்பட்ட 22 அறிக்கைகளில், வெறும் 11 அறிக்கைகளின் பிரதிகள் மட்டுமே எம்மால் கண்டுபிடிக்கமுடிந்தது.

மேலும், கடந்த காலங்களில், என்ன நடந்தன என்பதை நிறுவுவதற்கான விசாரணை வடிவங்களே மேற்கொள்ளப்பட்டன, மாறாக, குற்றத்திற்குக் காரணமானவர்களைப் பொறுப்புக்கூறவைப்பதற்காக அல்ல, இதனால், அதே நபர்களால் திரும்பத்திரும்ப பெரும் அநீதிகள் மேற்கொள்ளப்பட வழிவகுத்தது.

சிறிலங்கா ஜனாதிபதி அண்மையில் பரிந்துரைத்துள்ள பொறுப்புக்கூறல் முயற்சி தொடர்பான கடுமையான கவலைகளை இது எழுப்புகின்றது. ஜனாதிபதியின் இணையத்தளத்தில் கடந்தகால ஆணைக்குழுக்களின் அறிக்கைகளைப் பதிவேற்றம் செய்வதன் மூலமாக அவற்றின் உள்ளடக்கங்களை அங்கீகரிப்பதே உண்மையை நோக்கிய முதலாவது படியாக அமையும்.

நேர்மைத்தன்மையுடன் செயற்படுவதற்கு, படலந்த சித்திரவதைக்கூடத்தில் நடந்த சித்திரவதைகளும் தடுத்து வைப்புக்களும் ரணில் விக்கிரமசிங்கவிற்குத் தெரியாமல் நடந்திருப்பது சாத்தியமில்லை என்று கூறும் பத்தலந்த ஆணைக்குழுவின் அறிக்கை போன்ற, ஜனாதிபதியின் பெயரையும் உள்ளடக்கும் அறிக்கைகளையும் இதில் உள்ளடக்கவேண்டும்.

இதுவரை வெளியிடப்படாத அறிக்கைகளை வெளியிடும்படியும், கடந்த கால அறிக்கைகள் அனைத்தையும் பின்வரும் ஜனாதிபதி இணயத்தளத்தில் வெளியிடும்படியும் சிறிலங்கா அரசாங்கத்தை நாங்கள் வேண்டிக் கொள்வதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Previous articleகறுப்பு யூலைக்கு யானைக் கட்சியே பிரதான காரணம்-பிமல் சாடல்..!
Next articleயாழில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்..!{படங்கள்}